மோடியின் ஒரு தொலைபேசி அழைப்பு மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்: இந்தியத் தூதர்

மோடியின் ஒரு தொலைபேசி அழைப்பு மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்: இந்தியத் தூதர்

2 mins read
2c0cf665-e13f-44fa-934c-62d0579bb572
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச்சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் வாரணாசி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச்சூழலை இந்தியப் பிரதமர் மோடி நினைத்தால் ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கான இந்தியத் தூதர் ஹுசைன் ஹசன் மிர்சா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஈடுபட ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் விரும்பவில்லை என்றும் அவ்வாறு ஈடுபடுவதற்குத் தகுந்த காரணங்கள் ஏதுமில்லை என்றும் அவர் என்டிடிவி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

வளைகுடா நாடுகள், அவற்றின் தலைவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்கள், வணிக சமூகங்கள் மத்தியிலும் இந்தியப் பிரதமர் வெகுவாக மதிக்கப்படுவதாக அத்தூதர் தெரிவித்தார்.

“பிரதமர் மோடிக்கு ஈரான், இஸ்ரேலில் நண்பர்கள் உள்ளனர். அவர் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டால் தற்போது நிலவும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். ஒரேயோர் தொலைபேசி அழைப்பு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும்,” என்று தூதர் மிர்சா மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் சொந்தமான மண்ணில் சில தரப்பினர் தங்கள் போரை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய போக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார்.

மத்திய கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதில் ஐக்கிய அரசு சிற்றரசுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு இருப்பதாக ஒப்புக்கொண்ட திரு மிர்சா, அபுதாபி ஓர் உணர்திறன் வாய்ந்த அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இதுவரை ஏற்பட்டுள்ள குறைந்தபட்ச சேதம் குறித்த அறிக்கைகள் துல்லியமானவை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, மத்திய கிழக்கு மோதல் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

இது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 9) பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தற்போது நடந்துவரும் மோதல்களைக் கைவிட்டு, பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையையும் அரசதந்திர நடவடிக்கைகளையும் இந்தியா ஆதரிக்கும் என்றார்.

“கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், தனது ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியது. மேலும், அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி இருந்தோம்.

“பதற்றங்களைத் தணிக்க பேச்சுவார்த்தையும் அரசதந்திரமும் நீடிக்க வேண்டும்,” என்றார் திரு ஜெய்சங்கர்.

குறிப்புச் சொற்கள்
ஜெய்சங்கர்பிரதமர்நரேந்திர மோடிஇஸ்‌ரேல்ஈரான்ஐக்கிய அரபு சிற்றரசுகள்பேச்சுவார்த்தைநாடாளுமன்றம்