சாலையில் தரையிறங்கிய மோடி விமானம்; அசாமில் நடந்த வரலாற்று நிகழ்வு

சாலையில் தரையிறங்கிய மோடி விமானம்; அசாமில் நடந்த வரலாற்று நிகழ்வு

2 mins read
e8ea50c4-78d0-4a14-9497-b4458932f16a
அசாமில் அமைக்கப்பட்டுள்ள அவசரகால விமானத் தளத்தில் தரையிறங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானம். - படம்: இந்தியா டுடே

கவுகாத்தி: அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை-37ல், மோரான் புறவழிச்சாலைப் பகுதியில் இந்திய அரசின் அவசரகால விமானத் தரையிறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

சீன எல்லைக்கு அருகே உள்ள மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அது, வடகிழக்கு இந்தியாவின் முதல் அவசரகால விமானத் தரையிறங்கும் தளமாகும்.

அத்தளத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சி-130ஜே போர் விமானம் மூலம் தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

சனிக்கிழமையன்று (பிப்ரவரி 14) அசாமின் சாபுவா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மோடி, மோரான் புறவழிச்சாலைப் பகுதியில் உள்ள அவசரக் காலத் தளத்தில் தரையிறங்கினார்.

இந்த வரலாற்று நிகழ்விற்குப் பிறகு, கவுகாத்தியில் 5,450 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்கவும் இது பெரிதும் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கட்டுள்ள அத்தளம் சாதாரண சாலைகளைப் போலன்றி, கனரக விமானங்கள் தரையிறங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்தத் தளம் 40 டன் எடை வரையிலான போர் விமானங்களையும் 74 டன் வரையிலான அதிகபட்ச எடை கொண்ட சரக்கு விமானங்களையும் தாங்கும் வலிமை கொண்டது.

இந்திய விமானப்படையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து இதனை அனைத்துலகத் தரத்தில் உருவாக்கியுள்ளன.

அவசரகால விமானத் தளத்தின் முக்கியத்துவம்

போர் காலங்களில் அல்லது எல்லையில் நெருக்கடி ஏற்படும் போது, வழக்கமான விமான நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டால், இந்த நெடுஞ்சாலைத் தளங்கள் போர் விமானங்கள் தடையின்றி இயங்க உதவும்.

மேலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் அல்லது நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களின் போது, நிவாரணப் பொருட்களை விரைவாகக் கொண்டு செல்லவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இது ஒரு தற்காலிக ஓடுதளமாகச் செயல்படும்.

மற்ற நேரங்களில் இது பொதுமக்களின் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், விமானம் தரையிறங்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களான ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுபோன்ற தளங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்