புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் 550 கோடி ரூபாயை அரசாங்கம் செலவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை மோடியின் பயணச் செலவு ரூ.74.58 கோடியைத் தாண்டியுள்ளது என்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) மாநிலங்களவையில் தெரிவித்தார்.
எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில், “இந்த ஆண்டில் இதுவரை கணக்கிடப்பட்ட பயணங்களில் கடந்த மே மாதம் பிரதமர் மேற்கொண்ட 5 நாடுகள் பயணத்தின் போது நார்வே நாட்டுக்கான செலவே மிக அதிகமாக ரூ.17.46 கோடியாக இருந்தது,” என்றார்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 2025ல் ரூ.180 கோடிக்கும் அதிகமாகவும் 2024ல் ரூ.109 கோடியும் 2023ல் ரூ.93 கோடியும் 2022ல் ரூ.55 கோடியும் 2021ல் ரூ.36 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டிற்கான பல செலவுக் கணக்குகள் தற்காலிகமானவை என்றும் பயன்பாட்டு ரசீதுகள் இறுதி செய்யப்பட்ட பிறகே அவை உறுதி செய்யப்படும் என்றும் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் பிரான்ஸ் நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்திற்கான செலவுக் கணக்குகள் இன்னும் தொகுக்கப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் விநியோகத் தொடர் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவின் இருதரப்பு, வட்டார மற்றும் உலகளாவிய உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணங்கள் அமைவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2021 ஜூலை முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின்போது மொத்தம் 316 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் கையெழுத்தாகியுள்ளன.
அந்தப் பயணங்களின்போது கையெழுத்தான ஒப்பந்தங்களின் நாடு வாரியான விவரங்கள் அவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்தில் இந்தியா பெற்ற மொத்த அந்நிய நேரடி முதலீடு 381.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என்றும் அமைச்சு தெரிவித்தது.


