பழம்பெரும் தமிழ் நடிகரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்தநாளன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்ட திரு மோடி, அமரர் எம்ஜிஆர் சிறப்புமிக்கவர் எனப் பாராட்டினார்.
பாரத ரத்னா எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று எனக் குறிப்பிட்ட திரு மோடி, ஏழைகளின் சேவைக்காக அவரது வாழ்நாள் அர்ப்பணிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். “அவரது கனவுகளை நனவாக்க நாங்கள் அனைவரும் பாடுபடுகிறோம். அவருக்கு முன் நான் தலைவணங்குகிறேன்,” என்றார் திரு மோடி.
2021ல் குஜராத்தின் கெவாடியா நகரில் எட்டு ரயில்களின் பயணங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் திரு மோடி உரையாற்றியபோது, எம்ஜிஆரின் புகழை அவர் நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கெவாடியாவை அடையும் ரயில்களில் ஒன்று, சென்னையின் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில்வே நிலையத்திலிருந்து’ புறப்பட்டதைக் குறிப்பிட்டுத் திரு மோடி பேசினார்.
1917ல் ஜனவரி 17ல் பிறந்த திரு எம்ஜிஆர், 1987ல் டிசம்பர் 24ல் இயற்கை எய்தினார். 1977க்கும் 1987க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் எம்ஜிஆர் தமிழக முதல்வராகப் பணியாற்றினார். அவர் மறைந்த பிறகு, 1988ல் அவருக்கு உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 1936ல் வெளிவந்த ‘சதி லீலாவதி’ திரைப்படம் மூலம் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

