தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோகன்லாலுக்கு தாதாசாஹெப் பால்கே விருது

2 mins read
20195cda-bf6f-4279-adb5-7c1913631fcf
விரைவில் வெளிவரவிருக்கும் ‘விரு‌ஷ்‌ஷபா’ படத்தின் டீசர் காணொளியில் மோகன்லால். - காணொளிப் படம்: ஆ‌ஷிர்வாத் சினிமாஸ் / யூடியூப்

புதுடெல்லி: மலையாள நடிகர் மோகன்லால் தாதாசஹெப் ஃபால்கே விருது வழங்கி கெளரவகிக்கப்பட உள்ளார்.

இந்தியாவின் மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சு நேற்று முன்தினம் (செப்டம்பர் 20) இதனை அறிவித்தது.

தாதாசாஹெப் பால்கே, இந்தியத் திரையுலகின் ஆக உயரிய விருதாகும். 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகுக்கு ஆற்றிய பங்கிற்காக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) மோகன்லாலுக்கு இவ்விருது வழங்கப்படும். 71வது தேசிய திரைப்பட விருது நிகழ்ச்சியில் 65 வயது மோகன்லாலுக்கு தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்படும் என்று தகவல், ஒளிபரப்பு அமைச்சு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தது.

“மோகன்லாலின் சிறப்பான திரைப் பயணம் பல தலைமுறையினரை ஊக்குவிக்கிறது,” என்று அமைச்சு புகழாரம் சூட்டியது. 2023ஆம் ஆண்டுக்கான மோகன்லால் தாதாசாஹெப் பால்கே விருதைப் பெறுகிறார்.

மோகன்லால் பல்வேறு மொழிகளில் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்து ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடிம்பிடித்துள்ளார்.

மலையாளத் திரையுலகின் அடையாளமாக விளங்கும் இவர், தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

“தாதாசாஹெப் விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், இதை மிகுந்த மரியாதையாகக் கருதுகிறேன்,” என்று மோகன்லால் எக்ஸ் தளத்திால் பதிவிட்டார்.

சிறப்புத் தன்மையையும் பல்வேறு பரிமாணங்களில் செயல்படக்கூடிய ஆற்றலையும் மோகன்லாலின் திரைப்பணி சித்திரிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

இந்நிலையில், மோகன்லாலுக்குத் தமது வாழ்த்துகளைத் தேரிவித்துக்கொண்டுள்ளார் மலையாளத்தில் கொடிகட்டிப் பறக்கும் மற்றொரு நடிகரான மம்முட்டி. இருவரும் மலையாளத் திரையுலகின் இரு தூண்களாக விளங்குபவர்கள்.

மம்முட்டியும் பல ஆண்டுகாலமாகப் பல படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அவரும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்திருக்கிறார்.

மோகன்லாலை நினைத்து மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகவும் உண்மையிலேயே இந்த விருதுக்கு அவர் தகுதியானவர் என்றும் மம்முட்டி கூறியுள்ளார்.

மோகன்லால், தமிழிலும் ‘இருவர்’, ‘காப்பான்’, ஜில்லா’, ‘உன்னைப்போல் ஒருவன்’ போன்ற பிரபலமான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்திலும் கெளரவ வேடத்தில் நடித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திஇந்தியாவிருது