ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன், 61, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) முன்னிலையானார்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடி நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை, விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக அசாருதீனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அவர் அன்றைக்கு வரமுடியாத நிலையில் இருப்பதாகக்கூறி வேறு தேதியில் வருவதற்கு அனுமதி கேட்டிருந்தார்.
அதன்படி அவருக்கு அக்டோபர் 8ஆம் தேதி வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் முன்னிலையானார். விசாரணை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


