விமானப் பயணத்தின்போது பணம் திருட்டு; காவல்துறையில் புகார்

2 mins read
dae50ed5-e31e-4c16-8251-43dda9f5f4a8
இம்மாதம் 19ஆம் தேதி டெல்லியிலிருந்து மும்பைக்குப் பறந்த விமானத்தில் பணம் களவுபோனதாகக் கூறப்பட்டது. - படம்: ஊடகம்

மும்பை: டெல்லி - மும்பை இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது பயணி ஒருவரின் பணம் களவுபோனதாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஹீராநந்தனி குழுமத்தின் துணைத் தலைவர் முகேஷ் திவாரி, 42, இம்மாதம் 19ஆம் தேதி அவ்விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, அவர் ஒரு காகித உறைக்குள் வைத்திருந்த ரூ.11,500 பணம் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

காலை 9.50 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பிய அவ்விமானத்தில் ஹீராநந்தனி குடும்பத்தினர் பயணம் செய்தனர். ஹீராநந்தனி ஒரு பழுப்பு நிற உறைக்குள் பணம் வைத்திருந்ததாகவும் அதில் சிறுதொகையை எடுத்து உணவிற்காகச் செலவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் பணம் இருந்த அந்தக் காகித உறையை முன்னிருக்கையின் பின்பகுதியிலிருந்த செருகுபைக்குள் அவர் வைத்தார்.

ஆயினும், மும்பையில் தரையிறங்கியதும் விமானத்திலிருந்து இறங்கியபோது அதனை எடுக்க மறந்துவிட்டார். விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்திற்குச் செல்ல பேருந்தில் ஏறியபோதுதான் அப்பணம் குறித்து அவருக்கு நினைவிற்கு வந்தது.

உடனே, பேருந்திலிருந்த இண்டிகோ ஊழியர்களிடம் அவர் அதுபற்றிக் கூறி, உடனே பேருந்தை நிறுத்தும்படி சொன்னார். ஆனால், பயணப்பை வருமிடத்தில் இண்டிகோ ஊழியரை அணுகும்படி பேருந்திலிருந்த ஊழியர்கள் கூறிவிட்டனர்.

அதன்படி, பயணப்பை வரும் சுழல்பட்டை அருகே நின்றுகொண்டிருந்த இண்டிகோ ஊழியரைத் திவாரி அணுகினார். அவ்வூழியர் இன்னோர் ஊழியருடன் விமானத்திற்குச் சென்று, அந்தப் பழுப்புநிற உறையை எடுத்து வந்தார். அதனைத் திறந்து பார்த்தபோது ரூ.1001, ஏடிஎம் அட்டை, ஒரு நிறுவன அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை மட்டுமே இருந்தன; 11,500 ரூபாயைக் காணவில்லை.

துப்புரவு, பாதுகாவல் பணியாளர்களைத் தொடர்புகொண்டபோதும் பணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து, திவாரி காவல்துறையில் புகாரளித்தார்.

குறிப்புச் சொற்கள்