லக்னோ: கோவிலுக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் அடங்கிய பையை குரங்கு ஒன்று பறித்துச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) நிகழ்ந்தது.
அந்த மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால்.
அவரது மனைவி தமது குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்குச் சென்றார்.
கோவிலுக்கு செல்லும்போது அந்தப் பெண், தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி கைப்பையில் வைத்திருந்தார். அந்த நகைகளின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டது.
கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது திடீரென அங்கு கூடியிருந்த குரங்குகளில் ஒன்று, அபிஷேக்கின் மனைவி வைத்திருந்த நகைப்பையை பறித்துச்சென்றது.
அதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குரங்கு பறித்துச்சென்ற நகைப்பையை தேடினர். மேலும், இதுகுறித்து காவல்துறையிடமும் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் பல மணிநேரம் தேடிய காவல்துறையினர், ஒரு வழியாக முட்புதரில் இருந்து நகைப்பையை மீட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதில் அபிஷேக்கின் மனைவியின் நகைகள் அனைத்தும் இருந்தன. இதையடுத்து, மீட்கப்பட்ட நகைகள் அபிஷேக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.