தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காமுகனிடம் இருந்து சிறுமியைக் காப்பாற்றிய குரங்குகள்

1 mins read
e3330ffa-d753-40ef-b415-957ecd90fee4
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆடவரை காவல்துறை தேடுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

லக்னோ: ஆறு வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரக் கொடுமையில் இருந்து குரங்குகள் காப்பாற்றிய சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது.

மீரட் நகர் அருகே பாக்பத் வட்டாரத்தைச் சேர்ந்த தவுலா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை சிறுமி ஒருவர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் அந்தச் சிறுமியை மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

வீட்டின் அருகே இருந்த சில குரங்குகள் அந்த ஆடவரைச் சூழ்ந்தன. ஆடவர், குரங்குகளை விரட்ட முயன்றும் அவை ஆக்ரோஷமாக தாக்கியதில், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அதனால், பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய சிறுமி, நடந்த விவரத்தை தமது தந்தையிடம் விளக்கினார்.

இதையடுத்து, இந்தச் சம்பவம் பற்றி சிறுமியின் பெற்றோர் பாக்பத் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ஆடவரைத் தேடி வருகின்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

அதனை வைத்து ஆடவரை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

“குரங்குகள் காப்பாற்றாவிட்டால் எனது மகளை நான் இழந்திருப்பேன்,” என்று சிறுமியின் தந்தை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்