இந்தியப் பொருளியலை அச்சுறுத்தும் பருவமழைப் பற்றாக்குறை

இந்தியப் பொருளியலை அச்சுறுத்தும் பருவமழைப் பற்றாக்குறை

2 mins read
0c9a6cab-8d04-4fb9-b770-29179bd68ad1
ஜூன் 22ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு இயல்பைவிட 43 விழுக்காடு குறைவாக இருந்தது. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் எல் நினோ நிகழ்வு காரணமாக மழைப்பொழிவு குறையும் நிலை உள்ளதால் உணவுப்பொருள்களின் விலை உயரக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் அடுத்த பணவீக்க அச்சுறுத்தலாக உருவெடுத்து வருவதாகப் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் பெய்யக்கூடிய மொத்த மழைப்பொழிவில் தென்மேற்குப் பருவமழை ஏறத்தாழ 70 விழுக்காட்டுப் பங்கை வகிக்கிறது. நாட்டின் US$300 பில்லியன் மதிப்புள்ள வேளாண் பொருளியலுக்குத் தென்மேற்குப் பருவமழை மிகவும் முக்கியம்.

அந்த மழை குறையும்போது உணவுப் பொருள்களின் விலை, கிராமப்புற பயனீட்டாளர் தேவை, ஒட்டுமொத்தப் பொருளியல் உற்பத்தி ஆகியவற்றில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலவரம் குறித்து எல் அண்ட் டி நிதி நிறுவனத்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் ரஜினி தாக்கூர் கருத்துத் தெரிவிக்கையில், “குறைவான மழைப்பொழிவு பங்குச் சந்தைகள், கிராமப்புறச் செலவினங்கள் ஆகிய இரண்டிலும் எதிர்மறையான மனநிலையை உருவாக்குகிறது,” என்றார். அவரது நிறுவனம் 450 பில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட கிராமப்புறக் கடன் சேவைகளை வழங்கி வருகிறது.

ஜூன் மாதம் ஓரளவுக்கு நல்ல மழை தரும் மாதமாகவே கருதப்பட்டது. ஒட்டுமொத்த பருவமழைக் காலத்தில் நீண்டகால சராசரி மழைப்பொழிவு 90 விழுக்காடாக இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன் அடிப்படையில், ஜூன் மாதம் மட்டும் 92 விழுக்காடு இயல்பான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய பசிபிக் பெருங்கடலில் உருவாகும் எல் நினோ நிகழ்வு ஜூன் மாதத்தைப் பெரிதாகப் பாதிக்காது எனக் கருதப்பட்டதே அதற்குக் காரணம். ஆனால், ஜூன் மாதம் முடிய இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில், ஜூன் 22ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவு இயல்பைவிட 43 விழுக்காடு குறைவாக இருந்தது.

பருவமழைப் பற்றாக்குறை வேளாண் உற்பத்தியைக் குறைக்கும்; மின் உற்பத்தியைப் பாதிக்கும்; உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும்; கிராமப்புறத் தேவையை முடக்கி, ஒட்டுமொத்தப் பொருளியல் வளர்ச்சியைப் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கிடையே, பணவீக்க நிலவரத்தை மதிப்பிடுவதற்காக வானிலை மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் விலைவாசி தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பணவீக்கம் தனது இலக்கு வரம்பான 2-6 விழுக்காட்டுக்குள் இருப்பதால், ரிசர்வ் வங்கி இந்த மாதமும் தனது முக்கிய வட்டி விகிதத்தை 5.25 விழுக்காட்டிலேயே மாற்றமின்றி வைத்து, நடுநிலையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்