தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல மாநிலங்களில் பருவமழை தீவிரம்: பலர் பலி, பீகாரில் 2.5 மி. பேர் தத்தளிப்பு

2 mins read
4e97fba7-4160-43d3-8be5-cc759f601503
இமாச்சலப் பிரதேசத்தில் ஆக மோசமாக 241 பேர் மழை, வெள்ளத்துக்குப் பலியாகிவிட்டனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பல மாநிலங்களில்  பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பெருத்த சேதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. 

ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

டெல்லியில் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. டெல்லி-என்சிஆர், லஜ்பத் நகர், ஆர்கே புரம், லோதி சாலை, டெல்லி-ஹரியானா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, தலைநகர் லக்னோ உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலத்தில் கடந்த ஜூன் 20 முதல் பெய்து வரும் பருவமழை காரணமாக இதுவரை 241 பேர் உயிரிழந்தனர். நேரடியாக 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சாலை விபத்துகள் காரணமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் நிதிஷ் குமார் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். 

மழையின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பெருமழை காரணமாக பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

“பல இடங்களில், இந்த ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன. போஜ்பூர், பாட்னா, சரண், வைஷாலி, பெகுசராய், லக்கிசராய், முங்கர், ககாரியா, பாகல்பூர் உட்பட 10 மாவட்டங்களில் ஏறக்குறைய 2.5 மில்லியன் பேர் (25 லட்சம்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றனர். 

வடமாநிலங்களின் நிலவரம் இவ்வாறு இருக்கையில் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் பலத்த மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

51 வயது நபர் ஒருவர் நிலத்தடி நீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததாக விஜயவாடா நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்