அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த 100க்கும் மேற்பட்ட புதிய இந்திய நிறுவனங்கள்

அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த 100க்கும் மேற்பட்ட புதிய இந்திய நிறுவனங்கள்

2 mins read
045bc7ec-7ae2-4770-b293-2ce80aa18fe4
செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி, உயிரி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் லாபம் ஈட்ட அதிக காலம் தேவைப்படுகிறது. - படம்: தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.

இத்தகைய நிறுவனங்களுக்கு ஏற்ற முதலீடு, வாடிக்கையாளர்கள், செயற்கை நுண்ணறிவுச் சூழல் என அமெரிக்காவில் அனைத்தும் எளிதில் கிடைப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்திய புதுத் தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. மேலும், பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் அதிகம் பயன்படுத்துகின்றன.

எனவே, ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் தலைநகராகக் கருதப்படும் சான்பிரான்சிஸ்கோவுக்கு இடம்பெயரும் இந்திய புதுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் மென்பொருள் சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் ஏஐ நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களாகப் பெறுவது எளிது என்றும் ‘டை-சென்னை’ அமைப்பின் தலைவரான முருகவேல் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்திய ‘ஏஐ’, புதுத் தொழில் நிறுவனங்கள் அனைத்துமே அமெரிக்கா சென்றுவிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, வர்த்தக அமைச்சின் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின்கீழ் தற்போது இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புதுத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மிகாமல், அதன் மொத்த வர்த்தகம் ரூ.100 கோடிக்குக்கீழ் இருந்தால் மட்டுமே, அது புதுத் தொழில் நிறுவனமாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்படும்.

எனவே, செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி, உயிர்த்தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் லாபம் ஈட்ட அதிக காலம் தேவைப்படுகிறது.

ஆனால், அதற்குத் தேவையான நீண்டகால முதலீடுகள் கிடைப்பதில்லை. எனவேதான் ஏராளமான நிறுவனங்கள் அமெரிக்கா நோக்கிச் செல்கின்றன என்று துறைசார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்