பிரயாக்ராஜ்: இந்தியாவின் ஆகப் பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளாவின்போது ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இல்லறத்தைக் கைவிட்டுத் துறவிகளாக மாறியுள்ளனர்.
அவர்களில் 246 பெண்கள் நாக சன்னியாசினிகளாக உள்ளனர் என்று கூறப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 210 பெண்கள் நாக சன்னியாசினிகளாக மாறினர்.
கடந்த ஜனவரி 13ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இதனையடுத்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மில்லியன்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் திரிவேணி சங்கமத்திற்குச் சென்று, புனித நீராடி வருகின்றனர்.
அவ்வகையில், இம்முறை இதுவரை 400 மில்லியனுக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.
இதனிடையே, மகா கும்பமேளா நிகழ்வின்போது இளம்பெண்கள் பலரும் துறவறம் பூண்டு வருகின்றனர்.
இதன் தொடர்பில் உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை 7,000க்கும் மேற்பட்ட பெண்கள் மகா கும்பமேளா விழாவில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் நீராடி சன்னியாச தீட்சை எடுத்துக்கொண்டுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளது.
துறவறம் பூண்ட பெண்களில் பலரும் உயர்கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்[Ϟ]பிடத்தக்கது.