புதுடெல்லி: இந்தியாவில் இணைய மோசடிக் குற்றங்கள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன. 2020லிருந்து இணைய மோசடிகளால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பில், 80 விழுக்காட்டிற்கும் அதிகமான தொகை 2024, 2025ஆம் ஆண்டுகளில் மட்டுமே பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
“கடந்த 2020 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இணைய மோசடிகளால் இந்தியர்கள் மொத்தம் ரூ.55,659.81 கோடியை இழந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இதில், அதிர்ச்சியூட்டும் வகையில், ரூ.45,344.16 கோடி 2024, 2025ஆம் ஆண்டுகளில் மட்டும் பறிபோனது. இது, அண்மைக்காலமாக இணையக் குற்றவாளிகள் மக்களை எந்த அளவிற்குக் குறிவைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது,” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இணையக் குற்றங்கள் அதிகரித்திருப்பது, புகார்களின் எண்ணிக்கையிலும் தெளிவாக வெளிப்படுகிறது. கடந்த 2019 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அதிகாரிகள் மொத்தம் 67.32 லட்சம் இணைய மோசடிப் புகார்களைப் பதிவுசெய்துள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது கிட்டத்தட்ட 43.22 லட்சம் புகார்கள் கடந்த ஈராண்டுகளில் மட்டும் பதிவாகின.
இந்தத் திடீர் உயர்வு, இணையக் குற்றவாளிகளின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தையும் நாடு முழுவதும் உள்ள மக்கள் மோசடிகளில் எளிதாகச் சிக்கும் அபாயத்தில் இருப்பதையும் காட்டுகிறது.
இணைய மோசடிகளின் பாதிப்பிலிருந்து யாரும் தப்பவில்லை என்று குறிப்பிட்ட வட்டாரங்கள், இந்த ஆண்டில் முக்கியப் பிரமுகர்கள் பலரும்கூட இணைய மோசடிகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்தன.
டெல்லியில் மட்டும், பிரபலமானவர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு பெரிய இணைய மோசடி வழக்குகளில், ஒட்டுமொத்தமாக ரூ.21 கோடிக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தரவுகள் யாவும் மிக வேகமாக அதிகரித்து வரும் ஒரு கடுமையான நெருக்கடியின் கவலைக்குரிய நிலையை வெளிப்படுத்துகின்றன.
2020லிருந்து இணைய மோசடிகளில் இழந்த ஒவ்வொரு ஐந்து ரூபாயிலும் நான்கு ரூபாய்க்கும் அதிகமான தொகை கடந்த ஈராண்டுகளில் மட்டுமே பறிபோயுள்ள நிலையில், மின்னிலக்க நிதிசார் குற்றங்களின் வளர்ந்துவரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு, வலுவான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள், விரைவான சட்ட அமலாக்கம், பரவலான பொது விழிப்புணர்வு ஆகியவை அவசரமாகத் தேவை என்பதை இத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

