இந்தூர்: இந்தியாவின் தூய்மையான நகரமாக அறியப்படும் இந்தூரில் (மத்தியப் பிரதேசம்), அசுத்தமான குடிநீரைப் பருகியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாகீரத்புரா பகுதியில், பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவால், நல்ல தண்ணீருடன் கழிவுநீர் கலந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்ததாக மேயர் புஷ்யமித்ரா அறிவித்தார். ஆனால், 6 மாத குழந்தை உட்பட 14 பேர் வரை உயிரிழந்ததாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். அசுத்தமான நீரைப் பருகியதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 40,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் மோகன் யாதவ் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். உயிரிழப்பு எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, தகுந்த நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா உறுதியளித்துள்ளார்.
பழுதடைந்த குழாய் சரிசெய்யப்பட்டு, குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

