நவம்பர், டிசம்பரில் அதிக முகூர்த்த நாள்கள், அதிக திருமணங்கள்

2 mins read
d60e9361-e277-476f-90ab-9fd13288e467
இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான முகூர்த்த நாள்கள் உள்ளதால் அதிக திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவில் நவம்பர், டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறவுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறும் என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 35 லட்சம் திருமணங்கள் நடைபெற்றன. இதன்மூலம் ரூ.4.5 லட்சம் கோடி வணிகம் நடைபெற்றது. ஆண்டு அடிப்படையில் இந்த ஆண்டு அதிக திருமணங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன்மூலம் ரூ. 1.5 லட்சத்திற்கு வணிகம் நடைபெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து கல்யாண களை கட்டத்தொடங்கும். குறிப்பாக நவம்பர் 12ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 16 வரையிலான காலகட்டத்தில், மார்கழி பிறப்பதற்கு முன்னதாக அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடைபெறவுள்ளன.

இம்முறை நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான முகூர்த்த நாள்கள் உள்ளதால், இந்த ஆண்டு வணிகமும் திருமண நிகழ்வுகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

75 நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தரவுகளை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

திருமணம் சார்ந்த முக்கிய தொழில் துறைகளான உடை, அணிகலன்கள், உணவு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை முக்கியப் பங்காற்றுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர்க்கான குரல் என்ற இயக்கத்தைத் தொடக்கி வைத்ததன் மூலம் திருமணம் சார்ந்த வணிகத்தில், இம்முறை அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் மக்களின் பொருள்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக இக்கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மாற்றாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்