புதுடெல்லி: இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகளில் சிக்கி உயிரிழக்கும் பெண்களைக் காட்டிலும் வரதட்சணைக் கொடுமைக்குப் பலியாகும் பெண்களின் எண்ணிக்கை 25 மடங்கு அதிகம் என்று அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தத் தரவுகளை ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ இணையச் செய்தி வெளியிட்டு உள்ளது.
கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், வரதட்சணைப் பிரச்சினையில் 28 வயதுப் பெண் ஒருவர் அவரது கணவரால் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டார். நிக்கி என்னும் அந்தப் பெண் தமது ஆறு வயது மகன் கண்முன்னே தீயில் கருகி மாண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்தச் சம்பவத்திற்கு மறுநாள், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வரதட்சணைக் கொடுமை காரணமாக சஞ்சு பிஷ்னாய் என்னும் 32 வயது ஆசிரியை தமக்குத் தாமே தீவைத்துக் கொண்டார். அப்போது தமது மூன்று வயது மகளையும் அவர் அரவணைத்தார். தாயும் மகளும் தீயில் கருகி மாண்டனர்.
வடமாநிலங்களில் வரதட்சணைக் கொடுமைக்குப் பெண்கள் பலியாவது தொடர்கதையாக நீடிக்கும் வேளையில், இந்துஸ்தான் டைம்ஸ் அது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் வரதட்சணைக் கொடுமையில் சிக்கி உயிரிழக்கும் பெண்களின் விவரங்களை அது திரட்டியது. கடந்த 2022ஆம் ஆண்டு தரவுகள் ஆக அண்மையத் தரவுகளாக உள்ளன.
அந்த ஆண்டில் மட்டும், வரதரட்சணைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட புகார்களில் சம்பந்தப்பட்ட 13,651 பெண்கள் பலியானதாக உள்துறை அமைச்சின் தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவின் (என்சிஆர்பி) தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்தத் தரவுகள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த பெண்களின் உண்மையான எண்ணிக்கை என்று கருதினால், அந்தக் கொடுமையில் சிக்கும் மூன்றில் ஒரு பெண் உயிரிழப்பதாகப் பொருள்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கொடுமை குறித்து புகார் தெரிவித்தால் நிக்கி போல உயிரிழக்க நேரிடும் என்று பெண்கள் அஞ்சுவதால், வரதரட்சணைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் புகாரளிக்க பெரும்பாலான பெண்கள் தயங்குவதை தரவுகள் தெளிவாக உணர்த்துவதாக இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிடுகிறது.