சென்னை: காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நாட்டிலேயே முதல் முறையாக இலவச காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இது, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காலை உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது குறித்து ஆய்வு நடத்தி அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய தலைமை ஆசிரியர்கள் சிலர் பல காரணங்களைக் கூறியுள்ளனர்.
தினமும் காலை உணவு சாப்பிடும் மாணவர்களின் விவரத்தை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது அதற்குப் பொறுப்பு வகிப்பவர், காலை உணவுத் திட்ட செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆனால், பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், எஸ்ஐஆர் எனும் வாக்குப் பதிவேடு திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளதாலும், பல்வேறு பணிப்பளு காரணமாகவும் கடந்த சில மாதங்களாக பல தலைமை ஆசிரியர்கள் காலை உணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. காலை உணவுத் திட்ட செயலியின் வேகமும் மந்தமாக உள்ளது என்று தினமலர் தகவல் தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், நகர்ப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கும் உணவைக் கொடுத்து பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர்.
இந்த நிலையில் சமூக நலத்துறை கடந்த மாதம் எடுத்த கணக்கெடுப்பில், 4 லட்சத்து 68,554 மாணவர்களில், 2 லட்சத்து, 87,997 மாணவர்கள் மட்டுமே காலை உணவு சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. இது, மொத்த மாணவர்களில் 40 விழுக்காடாகும். இத்தகைய போக்கு தொடர்ந்தால், காலை உணவு திட்ட நிதி ஒதுக்கீடு, உணவுப்பகிர்வு குறைக்கப்படும் அபாயமிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

