புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலத்திற்குப் பிரதமராகப் பொறுப்பு வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக புதன்கிழமையுடன் (ஜூன் 10) அவர் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
புதன்கிழமையோடு 4,399 நாள்கள் பிரதமராக இருந்துள்ள திரு மோடி, 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். 2019இல் மக்கள் ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2024ல் மூன்றாவது முறையாகப் பிரதமரானார்.
அவருக்குமுன் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் நீண்ட காலம் பிரதமராகப் பொறுப்பு வகித்திருந்தாலும், திரு மோடியைப் போல் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவியில் இருந்ததில்லை.
இதற்கிடையே, பிரதமராகத் தனது 12 ஆண்டுகாலப் பயணம் என்பது நம்பிக்கை, வளர்ச்சி, பொதுநலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
“140 கோடி இந்தியக் குடிமக்களின் ஆசிகளுடனும் ‘தேசம் முதலில்’ என்ற உணர்வுடனும் நமது இளையர்கள், பெண்கள், வேளான் சகோதர சகோதரிகளை மேம்படுத்துவதில் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை.
“இந்த அயராத முயற்சிகளின் விளைவாகவே, இன்று உள்கட்டமைப்பு முதல் மின்னிலக்கப் புரட்சிவரை, இந்தியா உலக அரங்கில் ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது,” என்றும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
திரு மோடியின் பதவிக்காலம் வளர்ச்சி, பொதுநலனால் நிறைந்திருந்தது என்றும் நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோடியில்லாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் பாஜக தலைவர் நிதின் நபின் பாராட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உலகத் தலைவர்கள் பலரும் திரு மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
“இந்த மைல்கல், நீங்கள் பதவியில் இருந்த ஆண்டுகளுக்கான சான்றாக மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்கள் தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்றாகும்,” என்று இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்மாதிரி, தலைமைத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் இன்று 20 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கைக்கு உயர்த்தியிருப்பது ஒரு அற்புதமான சாதனை என்றும் பாப்புவா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மாரபே தெரிவித்துள்ளார்.

