சஹரன்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹரித்துவாரில், வரதட்சணையாகக் கார், 15 லட்ச ரூபாய் பணம் கொடுத்தும் போதவில்லை. ஆடம்பரக் கார் வேண்டும், இன்னும் 25 லட்சம் பணம் வேண்டும் என பெண் வீட்டாருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தையும் காரையும் கொடுக்க முடியாத சூழலில் பெண் வீட்டார் இருந்தனர். அதனால் அதுகுறித்து எவ்விதப் பதிலும் சொல்லாமல் இருந்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், 30 வயது மருமகள் சோனால் சைனியை வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர். பின்பு ஹரிதுவாரில் உள்ள கிராம பஞ்சாயத்தினரின் தலையீட்டால் சோனாலை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொண்டார். இருந்தும் சோனாலை உடல், மன ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சோனாலை கொலை செய்வதற்குத் துணிந்து அவருக்கு எச்ஐவி ஊசி குத்தியுள்ளனர்.
அந்த ஊசி குத்தியதற்குப் பின் சோனாலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி ஊசி செலுத்தப்பட்டது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட சோனாலின் தந்தை இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல்துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்படி தற்போது, அபிஷேக் என்ற சச்சின், அவரது பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மீது வரதட்சணைக் கொடுமை, தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.