ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில், வாக்களித்த மறுநாளே தாய் உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அத்தேர்தலில் பரத்பூர் மாவட்டம், நத்பாய் நகராட்சியின் ஆறாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஜெகதிஷ் பிரசாத், கடும் போட்டிக்கிடையே 151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம்ஷரன் 150 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்த வெற்றி ஜெகதிஷ் பிரசாத்துக்கு மகிழ்ச்சி அளித்தபோதிலும், தேர்தலில் வாக்களித்த மறுநாளே அவரது தாயார் காலமானது அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது.
மகனுக்கு வாக்களித்த மறுநாள் அம்மூதாட்டி உயிரிழந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது துக்கத்தில் இருந்தார் ஜெகதிஷ்.
தம்மால் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை என்று அவர் சோகத்தில் மூழ்கியிருக்க, தாய் அளித்த அந்த ஒற்றை வாக்குதான் மகனின் வெற்றியைத் தீர்மானித்திருக்கக்கூடும் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.
