மும்பை: மும்பையைச் சேர்ந்த ஓர் இளம்பெண் உதட்டுச் சாயம் (lipstick) எடுத்துச் செல்வதற்காக ரூ.27 லட்சம் (S$42,964) மதிப்புள்ள கைப்பையை வாங்கியுள்ளார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
அதில், ஒரு தாயும் அவரது மகளும் கைப்பை வாங்குவதற்காக ஒரு கடைக்குச் செல்கிறார்கள். கடையில் உள்ள பெண் அவர்களிடம் புகழ்பெற்ற ஹெர்மிஸ் கெல்லி (Hermes Kelly) நிறுவனத்தின் ஆடம்பரக் கைப்பைகளைக் காட்டுகிறார்.
வெள்ளைக் கைப்பை, கறுப்புக் கைப்பையுடன் பழுப்பு மற்றும் நீல நிறங்களிலும் கைப்பைகளைக் காட்டுகிறார்.
தாயும், மகளும் ஒவ்வொரு கைப்பை குறித்தும் விளக்கமாகக் கேட்கிறார்கள். பின்னர் தாய் ஒரு பெரிய பையைத் தேர்வுசெய்ய மகளிடம் பரிந்துரைக்கிறார்.
மகள் ரூ.27 லட்சம் மதிப்புள்ள சிறிய அளவிலான ஒரு பையைத் தேர்வுசெய்து தாயிடம் காட்டுகிறார்.
திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த இளம்பெண் தேனிலவின்போது தனது உதட்டுச் சாயத்தை எடுத்துச்செல்வதற்குப் பொருத்தமாக இருப்பதாகக் கூறி வெள்ளைக் கைப்பையைத் தேர்ந்தெடுப்பது காணொளியில் பதிவாகியுள்ளது.
காணொளி குறித்து இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக ஆடம்பரமாகச் செலவிடுவதாகச் சிலர் பதிவிட்ட வேளையில் நீண்டநாள் விருப்பம் என்றபோதும் இது தங்களுக்குக் கட்டுப்படியாகாது என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.