கோல்கத்தா: டார்ஜிலிங் மலை ரயிலின் முதல் பெண் பயணச்சீட்டுப் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ள சரிதா யோல்மோ வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தமது பணியைத் தொடங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
பிரிட்டிஷ் காலனித்துவத்தின்போது இந்தியாவில் அமைக்கப்பட்ட டார்ஜிலிங் மலை ரயில் இன்றளவும் உலக மரபுடைமை அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மலை ரயில் சேவை, 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோ மரபுடமை அடையாளங்களில் ஒன்று எனும் சிறப்புத் தகுதியைப் பெற்றது.
கடல்மட்டத்தில் இருந்து ஏறக்குறைய 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த மலை ரயில் பாதை.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங், நியூ ஜல்பாய்குரி ஆகிய பகுதிகளுக்கு இடையேயான 88 கிலோமீட்டர் தொலைவை இந்த மலை ரயில்பாதை இணைக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க, பழைமைவாய்ந்த மலை ரயிலில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறுகிறார் சரிதா.
அதிலும், உலக அளவில் பெயர்பெற்றுள்ள மலை ரயிலின் முதல் பெண் பயணச்சீட்டுப் பரிசோதகராக பணியாற்றுவது பெருமிதம் அளிக்கிறது என்றும் அவர் சொன்னார்.
இது சரிதாவுக்குக் கிடைத்துள்ள பணிசார்ந்த பிரதிநிதித்துவம் மட்டுமன்று என்றும் இந்திய ரயில்வேயின் தொழில்நுட்ப, களப்பணியில் மகளிர் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும் முக்கியமான தருணம் என்றும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் கபிஞ்சல் கிஷோர் சர்மா தெரிவித்துள்ளார்.

