திருவனந்தபுரம்: அண்மையில் வெளியான ‘எம்புரான்’ மலையாளப் படத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் மோகன்லால் நடித்துள்ள இப்படத்தில் வலதுசாரி அரசியல் குறித்த விமர்சனங்களும் குஜராத் கலவரம் பற்றிய மறைமுகக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே இவ்விவகாரம் கேரளாவில் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பாஜக ஆதரவு வலதுசாரி சமூக ஊடகக் கணக்குகளில் இப்படத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன.
பிற மாநில பாஜகவினரும் சங்க பரிவார் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கேரள மாநில பாஜக நிர்வாகிகள் இதுவரை இப்படத்துக்கு எதிராக எதிர்மறை கருத்துகள் எதையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.
இதையடுத்து பாஜகவின் சகிப்புத்தன்மையற்ற போக்கை கண்டிப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
அண்மையில் வெளியான ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘எமர்ஜென்சி’ ஆகியவை காங்கிரசை விமர்சிப்பதாகவும் பாஜகவினர் அப்படங்களை வரவேற்றதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சுட்டிக்காட்டி உள்ளார்.
“ஆனால் பாஜக அவற்றையெல்லாம் வரவேற்றது. மற்ற கட்சிகள் விமர்சிக்கப்படும்போது மட்டுமே சகிப்புத்தன்மையைக் காட்டுவது சரியா என்பது தொடர்பாக பாஜக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இப்படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, குஜராத் கலவரம் மற்றும் கோத்ரா ஆகியவை இந்திய வரலாற்றின் ஒரு பகுதி என கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
“அதை வெட்ட என்ன கத்தரிக்கோல் பயன்படுத்தப்பட்டாலும் அடுத்தடுத்த தலைமுறைகள் அதைப் பார்த்து அறிந்து கொள்ளும் கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருப்பதால், நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஒரு பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.