தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

2 mins read
0540fdc5-ce39-4848-9e62-a4b0854d5aa9
நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே ராகுல் காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அதானி மீது அமெரிக்கா சுமத்திய லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை ஏற்றார்.

வயநாடு எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பதாகைகளை ஏந்தியவாறு நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே திரண்டு அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிர்வு நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதானியைக் கைது செய்யவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவை அலுவல்கள் முடங்கியுள்ளன.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) காலை நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் தொடங்கியபோது, கௌதம் அதானி முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரினா்.

ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனா்.

பின்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அவைகளை விட்டு வெளியேறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்ற விவாத அனுமதி மறுப்பை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினா்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அதானி, மணிப்பூர் ஆகிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், மன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, திங்கட்கிழமை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆனால் திட்டமிட்ட ரீதியில் மட்டுமே நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று மன்ற நாயகர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக தன்கர் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்