பெங்களூரு: தனக்கு வழங்கப்பட்ட 14 மனைகளையும் திருப்பி ஒப்படைக்கத் தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி ‘முடா’விற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “எனக்கு என் கணவர்தான் முக்கியம், நிலம் பெரிதல்ல,” எனவும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகத்தில் சித்தராமையா, 76, தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சித்தராமையா மீதான ‘முடா’ நில முறைகேடு விவகாரம் கடந்த ஒரு மாதமாக கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது.
சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை லே-அவுட் அமைப்பதற்காக ‘முடா’ எனப்படும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப் படுத்தியது.
இதற்குப் பதிலாக மைசூரு நகரின் மையப் பகுதியான விஜயநகரில் 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மனைவிக்கு வீட்டுமனைகளை வாங்கிக் கொடுத்ததாக முதல்வர் சித்தராமையாமீது, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் சித்தராமையா, பார்வதி, முதல்வரின் மைத்துநர் மல்லிகார்ஜுன சுவாமி, நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்ய மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதி கடந்த மாதம் 25ஆம் தேதி உத்தரவிட்டார்.
26ஆம் தேதி முதல்வர் உட்பட நான்கு பேர் மீதும் 17 பிரிவுகளில் வழக்குப் பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், முதல்வர்மீது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா, முடா வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி கடந்த 28ஆம் தேதி அமலாக்கத்துறையில் புகார் செய்தார்.
அந்தப் புகாரின்படி, சித்தராமையா மீது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
விசாரணைக்கு முன்னிலையாகும்படி கூடிய விரைவில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதியுள்ள கடிதத்தில், மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட 14 மனைகளின் பத்திரங்களை ரத்து செய்து, அவற்றைத் திருப்பி ஒப்படைப்பதாகக் கூறியுள்ளார்.

