புதுடெல்லி: அதிகாலை வேளையில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பு நிலவியது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். பலர் காயமடைந்தனர்.
டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் நகரில் இருந்தது அந்த நான்குமாடிக் கட்டடம். சனிக்கிழமை (ஏப்ரல் 19ஆம் தேதி) அதிகாலை மூன்று மணியளவில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
பயங்கர சத்தத்துடன் கட்டடம் விழுந்ததை அடுத்து அப்பகுதியில் சில நொடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் உள்ளூர் காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கி நால்வர் பலியான நிலையில், உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணியளவில் 14 பேர் மீட்கப்பட்டனர் என்றும் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடும் என்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கட்டடம் எதனால் இடிந்து விழுந்தது என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை. விசாரணை தொடங்கி உள்ளதாகவும் விரைவில் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. திடீர் வானிலை மாற்றம் காரணமாக அங்கு வெப்பத்தின் தாக்கம் குறைந்த நிலையில், இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது வேதனை அளிப்பதாக முஸ்தபாபாத் பகுதி மக்கள் தெரிவித்தனர்.