திருவனந்தபுரம்: கேரளாவில் சிறைக் கைதிகளின் ஊதியம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. மேலும் கொல்லம் உள்ளிட்ட பகுதியில் மாவட்ட, கிளைச் சிறைகள் உள்ளன.
இச்சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் துணி, தோல், அலுமினியப் பொருள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கைதிகளுக்குத் தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது கைதிகளுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
பணியின்போது திறமையாகச் செயல்படும் கைதிகளுக்கு ரூ.152 அளிக்கப்பட்டு வரும் நிலையில், அது தற்போது ரூ.620ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓரளவு திறமையுடன் பணியாற்றி ரூ.127 பெறும் கைதிகள் இனி ரூ.560 ஊதியம் பெறுவர். எந்தப் பணியிலும் திறமையை வெளிப்படுத்தாத கைதிகளின் ஊதியம் ரூ.63ல் இருந்து ரூ.530ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் பலன்பெறுவர். கேரள அரசின் இந்த நடவடிக்கை கைதிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

