மும்பை: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதை திட்டத்தின்கீழ் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் 4.88 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை சனிக்கிழமை (செப்டம்பர் 20) தோண்டி முடிக்கப்பட்டது.
இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இறுதி அகழ்வுப் பணி நடைபெற்றது.
“புல்லட் ரயில் நடுத்தர வர்க்கத்தினருக்கான போக்குவரத்தாக இருக்கும். இதன் கட்டணங்கள் நியாயமானதாக இருக்கும். மும்பை - அகமதாபாத் பயண நேரத்தை 9 மணி நேரமாக கூகல் வரைப்படச் செயலி காட்டுகிறது. புல்லட் ரயிலில் 2 மணி 7 நிமிடங்களில் இப்பயணத்தை முடித்துவிடலாம்.
“புல்லட் ரயில் திட்டத்தில் சூரத்-பில்மோரா இடையிலான முதல் பிரிவு 2027 டிசம்பரில் தொடங்கப்படும். 2028ல் தானேவும் 2029ல் பாந்த்ரா குர்லா காம்பிளக்சும் இணைக்கப்படும். காலை, மாலை உச்சவேளைகளின்போது அரை மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். இந்த வழித்தடம் முழுமை அடைந்தவுடன் நெரிசல் நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மும்பை - அகமதாபாத் பயணத்திற்கு பயணச் சீட்டு முன்பதிவு தேவையில்லை. பயணிகள் ரயில் நிலையம் வந்து ரயிலில் ஏறிச் செல்லலாம்” என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.