அயோத்தி ராமர் கோவிலுக்கு 1,425 கி.மீ. நடந்தே செல்லும் இஸ்லாமியப் பெண்

1 mins read
8d2feb7d-be62-4653-9c86-ab25fd929a6a
தம் இரு நண்பர்களுடன் மும்பையிலிருந்து அயோத்திக்குப் பாதயாத்திரை செல்லும் ஷப்னம். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: இந்தியாவின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு நேரில் சென்று வழிபடும் நோக்கில் மும்பையிலிருந்து நீண்ட பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார் ஷப்னம் என்ற இஸ்லாமியப் பெண்.

ராமன் ராஜ் சர்மா, வினீத் பாண்டே என்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து 1,425 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தே செல்கிறார் ஷப்னம்.

“ராமபிரானை வழிபட இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை, நல்ல மனிதராக இருந்தால் போதும்,” என்கிறார் அவர்.

ஒரு நாளைக்கு 25-30 கிலோமீட்டர் நடக்கும் அவர்கள், இப்போது மத்தியப் பிரதேச மாநிலத்தை அடைந்துவிட்டனர்.

நீண்ட யாத்திரை என்பதால் களைப்படைந்தாலும் ராமபிரான்மீது கொண்டுள்ள பக்தி தங்களை உந்திச் செல்வதாக அவர்கள் கூறினர்.

இதன்மூலம், ஆண்கள் மட்டுமே இத்தகைய கடுமையான நடைப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்ற தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறியவும் ஷப்னம் இலக்கு கொண்டுள்ளார்.

ஷப்னமின் பாத யாத்திரையில் சவால்களுக்கும் பஞ்சமில்லை. ஆயினும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, வழியில் அவர் தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்து தருகிறது காவல்துறை.

வழியில் சந்திக்கும் பலரும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நாளுக்குள் அயோத்தியைச் சென்றடைய வேண்டும் என்று இவர்கள் இலக்கு வகுக்கவில்லை.

“சாதி, சமயப் பாகுபாடின்றி, ராமபிரான் எல்லாருக்கும் உரியவர்,” என்கிறார் ஷப்னம்.

இன, சமயப் பாகுபாட்டால் உலகம் பிளவுபட்டுக் கிடக்கும் வேளையில், ஷப்னமின் இந்த நடைப்பயணம் ஒற்றுமையை வலியுறுத்துவதோடு, அன்பிற்கும் பக்திக்கும் எல்லையே இல்லை என்பதையும் மெய்ப்பிக்கிறது.

குறிப்புச் சொற்கள்