மும்பை: ரூ.5,000 கோடி மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டுள்ள மும்பை பாஜக எம்எல்ஏ பராக் ஷா, திடீரென யாசகராக மாறி கண்ணில் தென்பட்ட அனைவரிடமும் யாசகம் கேட்டார்.
தமது அகந்தையை அழித்து, தரைமட்டத்திற்குத் திரும்ப இந்த அனுபவம் தனக்கு உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பராக் ஷாவின் ஆன்மீக குருவான ராஷ்ட்ரசந்த் ஸ்ரீ நம்ரமுனி மகாராஜ், ஜைன சமயத்தின் புனிதமான ‘சதுர்மாஸ்’ காலத்தில், பராக் ஷாவுக்கு ஓர் உத்தரவிட்டார்.
மனித வாழ்க்கையின் உண்மையான துன்பங்களையும் சாதாரண மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் நேரடியாக உணர வேண்டும் என்பதே அந்த உத்தரவு.
தமிழில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் இதேபோன்ற காட்சியமைப்பு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
குருவின் கட்டளையை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ பராக் ஷா, தனது வசதிகள், ஆடம்பரங்கள் அனைத்தையும் ஒரு நாள் முழுவதும் துறந்ததுடன், சாதாரண உடை அணிந்து, ஒப்பனை மூலம் அடையாளம் காண முடியாத ஒரு யாசகராகவே மாறிப்போனார்.
ரயில், பேருந்து நிலையங்களிலும் சாலைகளிலும் உணவுக்காக யாசகம் கேட்டு கையேந்தியபோது, எதிர்கொண்ட அனுபவங்களை தற்போது விவரித்துள்ளார் பராக் ஷா.
தனது சொந்தக் குடியிருப்புக்குள் நுழைய முயன்றபோது, அவரது பாதுகாவலரே அவரை விரட்டியடித்ததாகவும் நெருக்கமான நண்பரிடம் கையேந்தி நின்றபோது, அவரும் அதட்டி அனுப்பியதாகவும் பராக் ஷா கூறியுள்ளார்.
உலகில் யாரும் மனிதர்களை மதிப்பதில்லை என்றும் பணம், அதிகாரத்தை மட்டுமே மதிக்கிறார்கள் என்றும் இந்நிகழ்வு தமக்கு உணர்த்தியதாகத் தெரிவித்துள்ள பராக் ஷா, சில இளையர்கள் தன் மீது இரக்கப்பட்டு ரூ.20 கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
