மும்பை: இந்தியாவின் மும்பை நகருக்கு அருகே நிகழந்த படகு விபத்தில் காணாமற்போன பயணி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவ்விபத்தில் மாண்டோரின் எண்ணிக்கை 14க்கு அதிகரித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் ‘ஸ்பீட்போட்’ படகு ஒன்று, ‘நீல் கமல்’ என்ற பெயர் சூட்டப்பட்ட பயணிகள் ‘ஃபெரி’ படகு மீது மோதியதால் விபத்து நேர்ந்தது. கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 18) நிகழ்ந்த அதில் 13 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) காணாமற்போன 43 வயது ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விபத்தில் காணாமற்போன ஏழு வயது சிறுவனைத் தேடும் பணிகள் இன்னும் தொடர்வதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான கடற்படைக் கப்பல், பயணிகள் படகு இரண்டிலும் மொத்தம் 113 பேர் இருந்தனர். அவர்களில் 14 பேர் மாண்டுவிட்டனர், 98 பேர் மீட்கப்பட்டனர். காயமுற்ற இருவரும் மீட்கப்பட்டோரில் அடங்குவர்.
விபத்து நேர்ந்தபோது கடற்படைப் படகில் அறுவர் இருந்தனர். அவர்களில் இருவர் உயிர் தப்பியதாகக் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.