மும்பை-சென்னை ஏர் இந்தியா விமானம் அவசரத் தரையிறக்கம்

1 mins read
5b82b370-d954-454e-823c-4a465c3913f3
2025 ஜூன் 12ஆம் தேதி சென்னையில் பறக்கும் ஒரு விமானம். - படம்: ஏஎஃப்பி

சென்னை: மும்பையிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை (ஜூன் 28) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானதால் அது புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது.

148 பயணிகள், ஆறு பணியாளர்களுடன் புறப்பட்ட அந்த விமானம், வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்குப் புறப்படவிருந்தது. ஆனால், அதன் புறப்பாடு ஒரு மணி நேரத்துக்குமேல் தாமதமானது.

நள்ளிரவு வாக்கில் அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாற்றை அடையாளம் கண்ட விமானி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.

பின்னர் அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது. பயணிகள் விமானத்தில் இருந்தபோதே கோளாற்றைச் சரிசெய்ய பொறியாளர்கள் முற்பட்டனர். ஆனால், அவர்களால் அதைச் சரிசெய்ய முடியவில்லை.

பிறகு மாற்று விமானம் ஒன்றுக்கு ஏர் இந்தியா ஏற்பாடு செய்தது. சனிக்கிழமை அதிகாலை 4.35 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், காலை 6.05 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.

இச்சம்பவத்தால் பயணிகளுக்கு ஐந்து மணி நேரத்துக்குமேல் தாமதம் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்