மனைவியாக நடிக்க வந்தவரிடம் காதல் வயப்பட்ட மாப்பிள்ளை

ஆடவர் ஒருவரைத் ‘திருமணம்' செய்துகொண்டு ஐந்து நாள்கள் அவருடன் குடித்தனம் நடத்த ஒப்புக்கொண்ட 21 வயதுப் பெண், தாம் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

அவரை சிக்கலில் இருந்து விடுவிக்க காவல்துறை வரவழைக்கப்பட வேண்டியிருந்தது.

தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அந்தப் பெண், ரூ.5,000 பணத்துக்காக மனைவி வேடத்தில் நடிக்க இணக்கம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவருடைய மனைவியாக அவர் நடிக்க வேண்டும். தம் தோழி ஆயிஷாவின் கணவரான கரன் என்பவரிடமிருந்து அந்த வாய்ப்பு அப்பெண்ணுக்குக் கிட்டியது.

மார்ச் 12ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சவுர் எனும் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு கரனுடன் வந்துசேர்ந்தார் அந்தப் பெண்.

அங்கு முகேஷ் எனும் ‘மாப்பிள்ளை’யிடம் அப்பெண்ணை கரன் அறிமுகம் செய்துவைத்தார். அப்பெண்ணைக் கண்டதும் முகேஷ் காதல் வயப்பட்டுவிட்டார்.

கரனைத் தனியாகக் கூப்பிட்டுப் பேசிய முகேஷ், பின்னர் தம் குடும்பத்தினர் முன்னால் தம் மனைவியாக நடிக்க வேண்டும் என்று அப்பெண்ணிடம் கூறினார்.

அதன்படி, கோயிலில் முகேஷின் குடும்பத்தினர் முன்னிலையில் அப்பெண்ணின் கழுத்தில் முகேஷ் தாலியைக் கட்டினார். முகேஷின் வீட்டிற்குள் குடியேறிய அப்பெண், இல்லத்தரசியாக நடித்தார்.

‘திருமணமாகி’ ஆறாவது நாளில், தாம் நடிப்பை முடித்துக்கொள்வதாக முகேஷிடம் அப்பெண் கூறினார். ஆனால், அவரைப் போகவிட முகேஷ் மறுத்துவிட்டார்.

தங்களுக்கு இடையே உண்மையிலேயே திருமணம் நடைபெற்று இருப்பதாகவும் அப்பெண்ணை அழைத்துவர கரனிடம் தாம் பணம் கொடுத்ததாகவும் முகேஷ் அப்பெண்ணிடம் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்த தொலைப்பேசியில் கரனை அழைத்தார் அப்பெண். ஆனால், அவரது கேள்விகளுக்கு கரன் சரியாகப் பதிலளிக்கவில்லை.

தாம் பிரச்சினையில் சிக்கிக்கொண்டதை உணர்ந்த அப்பெண், மும்பையைச் சேர்ந்த நண்பர் ஒருவரை ரகசியமாகத் தொடர்புகொண்டார். தாராவி காவல் நிலைய அதிகாரிகளுக்கு அந்த நண்பர் இந்த விவகாரம் குறித்து தகவல் அளித்தார்.

காவல்துறை அதிகாரிகள் மத்தியப் பிரதேசம் வந்துசேர்ந்தபோது, கரனும் முகேஷும் தப்பிவிட்டதாக தாராவி காவல் நிலையத்தைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் விஜய் கந்தல் கவோங்கர் கூறினார்.

அப்பெண்ணை மும்பைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், “பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அவர் “இல்லை” எனப் பதிலளித்தார்.

தலைமறைவாகியுள்ள கரனையும் முகேஷையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

சமுதாயப் பிரச்சினையைப் பிரதிபலிக்கும் சம்பவம்

மத்தியப் பிரதேசத்தில் நிலவும் சமுதாயப் பிரச்சினையான பாலின சமத்துவமின்மையை இச்சம்பவம் பிரதிபலிப்பதாக காவல்துறை ஆய்வாளர் விஜய் கூறினார்.

“பெண்களைவிட ஆண்களே அதிகமாக இங்கு உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் ரூ.50,000 கொடுத்து நடுத்தர வயது ஆண்கள் பெண் தேடித் திருமணம் செய்துகொள்கின்றனர்,” என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!