மும்பை: இலகுரக வாகனங்களுக்கு இனி சுங்கக் கட்டணம் கிடையாது

மும்பை: இலகுரக வாகனங்களுக்கு இனி சுங்கக் கட்டணம் கிடையாது

1 mins read
71068251-d4a1-4108-9e9c-300b5bc8ed4d
மும்பை மாநகரின் ஐந்து இடங்களில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகள் வழியாகச் செல்லும் இலகுரக வாகனவோட்டிகள் இனி சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. - மாதிரிப்படம்: பிடிஐ

மும்பை: விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இலகுரக வாகனங்கள் மூலம் மும்பை மாநகருக்குச் செல்வோரும் அங்கிருந்து வெளியேறுவோரும் இனி சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு திங்கட்கிழமை (அக்டோபர் 14) முதல் நடப்பிற்கு வந்துள்ளது.

கார், ஜீப், வேன், சிறிய சரக்குந்து போன்ற வாகனங்களுக்கு இது பொருந்தும்.

மும்பை மாநகரில் தகிசார், ஆனந்த் நகர், வைஷாலி, எய்ரோலி, முலுந்த் ஆகிய ஐந்து இடங்களில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஆயினும், அடல் பாலம் இப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பண்டிகைக் காலம் நெருங்கிவிட்டதால் மும்பையில் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், சுங்கக் கட்டண விலக்கு அறிவிப்பு மும்பைக்குச் செல்வோர்க்கும் அங்கிருந்து வெளியேறுவோர்க்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை நகர நுழைவாயில்களில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும் என சிவசேனா கட்சியின் இரு பிரிவுகள், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் வெகுகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன.

அந்த ஐந்து சுங்கச்சாவடிகள் வழியாக நாள்தோறும் 600,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துசெல்வதாகக் கூறப்படுகிறது. கடந்த 2000ஆவது ஆண்டிலிருந்து அந்த நுழைவாயில்களில் சுங்கக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்