மும்பை மராட்டிய நகரமன்று: அண்ணாமலை கருத்துக்கு எதிர்ப்பு

2 mins read
023986df-5139-43cc-8ca2-c1858a1e0586
தமது கருத்துகளுக்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. - படம்: பிடிஐ

மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான கே அண்ணாமலை கூறிய கருத்துக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மும்பை மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதனையொட்டி, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து அங்கு அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலாட் மற்றும் சர்க்கோப் பகுதிகளில் வாக்கு வேட்டையில் இறங்கிய அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “மும்பை ஒரு மகாராஷ்டிர நகரமன்று. அது ஓர் அனைத்துலக நகரம். மும்பையின் வரவுசெலவுத் திட்டம் ரூ.75,000 கோடி. சென்னையின் வரவுசெலவுத் திட்டம் ரூ.8,000 கோடி. பெங்களூரின் வரவுசெலவுத் திட்டம் ரூ.19,000 கோடி. அதனால், நிதியையும் வளர்ச்சியையும் சிறப்பாகக் கையாள நல்லவர்கள் தேவைப்படுகிறார்கள்,” என்று அண்ணாமலை கூறினார்.

“மக்கள் மூன்று இயந்திர அரசை விரும்புகின்றனர். மும்பையில் மட்டுமே அது சாத்தியம். டெல்லியில் மோடி இருக்கிறார்; மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இருக்கிறார். அதுபோல, மும்பைக்கும் பாஜக மேயர் வேண்டும்,” என்றார் அவர்.

அவரது இக்கருத்துக்கு மகாராஷ்டிராவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுபற்றிக் கருத்துரைத்த சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சஞ்சய் ராவத், “தமிழ்நாட்டிலிருந்து வந்த அண்ணாமலை, மும்பை மகாராஷ்டிராவிற்குச் சொந்தமானதில்லை,” எனச் சாடினார்.

இவ்விவகாரத்தில் முதல்வர் ஃபட்னாவிசும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அமைதிகாப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

“சிவசேனை உண்மையாகவே மகாராஷ்டிராவின் பின்னால் நிற்பதாக இருந்தால் இந்த அவமானத்தைப் பொறுத்துக்கொண்டிருக்காது. மும்பை மகாராஷ்டிராவினுடையது இல்லை என்றால், இது யாருடையது என்று முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கேட்கிறேன். அண்ணாமலையின் கூற்று மராட்டிய மக்களையும் மராட்டியப் பெருமையையும் அவமானப்படுத்துவதாக உள்ளது. அவரைக் கைதுசெய்து வழக்கு பதியவேண்டும்,” என்று திரு ராவத் வலியுறுத்தினார்.

“இவ்வாறு சொல்வது முற்றிலும் தவறானது. மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி. அதனை எவராலும் பிரிக்க முடியாது,” என்றார் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே.

தமது கருத்துகளுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மராட்டி ஏக்கிகாரண் சமிதி எனும் அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்