நடிகரின் கடைக்குள் புகுந்து களவாடிய நால்வர் கைது

நடிகரின் கடைக்குள் புகுந்து களவாடிய நால்வர் கைது

1 mins read
7243d543-d355-4c76-b3d9-c1852bec5594
பிடிபட்டவர்கள் 23 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். படம்: இந்திய ஊடகம் -

காருக்கு பெட்ரோல் நிரப்ப தங்களிடம் போதிய பணம் இல்லாததால், பிரபல நடிகர் ஒருவருக்குச் சொந்தமான கடைக்குள் புகுந்து திருடர்கள் நால்வர் பணத்தையும் கைப்பேசியையும் களவாடினர்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள கோரேகான் எனும் இடத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.

கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகள் மூலம் அந்த காரை அடையாளம் கண்ட காவல்துறையினர், புனே நகரைச் சேர்ந்த அந்த ஆடவர்களைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பிடிபட்டவர்கள் 23 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராக டசன் கணக்கான வழக்குகள் உள்ளன.

"ஆடவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். குற்றம் நடந்த நாளில் அவர்களிடம் போதிய பணம் இல்லை. நடிகரின் கடைக்குள் பலவந்தமாக புகுந்து, ரொக்கத்தையும் கைப்பேசியையும் அவர்கள் திருடினர்," என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பிரபல மராத்தி நடிகர் சுனி பார்வே அந்தக் கடைக்குச் சொந்தக்காரர். அவருடைய மகன் அதர்வா அளித்த புகாரின் அடிப்படையில், ஏப்ரல் 12ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்தக் கடையிலிருந்து குறைந்தது ரூ.10,000 ரொக்கமும் கைப்பேசியும் களவாடப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட அந்த நால்வரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மற்றோர் அதிகாரி தெரிவித்தார்.