மும்பை மழை: கட்டடம் இடிந்து 6 பேர் பலி

மும்பை மழை: கட்டடம் இடிந்து 6 பேர் பலி

2 mins read
2155fc0d-b61d-49db-8b11-09e1249dc290
மழை காரணமாக மும்பை, புனேவை இணைக்கும் விரைவுச் சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தச் சாலை மூடப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

மும்பை: மும்பையில் கனமழை நீடித்துவரும் நிலையில், அங்குள்ள மூன்று மாடிக் கட்டடத் தொகுப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் பருவ மழையின் சீற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அம்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் மன்கூர்த் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) இரவு மூன்று மாடிகள் கொண்ட கட்டடத் தொகுப்பு ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட ஆறு பேர் மாண்டனர் என்றும் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக மும்பையில் நீடித்துவரும் கனமழைக்குத் தாக்குபிடிக்க முடியாமல் கட்டடம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக் கட்டடத் தொகுப்பின் முன்பகுதியில் உள்ள மூன்று குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தீயணைப்புப் படை, காவல்துறை, 108 ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

கட்டட இடிபாடுகளுக்கிடையில் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ள அப்பகுதி பாஜக கவுன்சிலர் நவநாத்பான், கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மழை காரணமாக மும்பை, புனேவை இணைக்கும் விரைவுச் சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தச் சாலை மூடப்பட்டது.

இரு நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொள்ள முடியாமல் தவிப்பிற்குள்ளாயினர்.

நீண்டதூர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சாலை, விமானப் போக்குவரத்துதுகளும் பாதிக்கப்பட்டன.

மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அதிதீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமையும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

கடந்த மாத இறுதியிலிருந்து மும்பை சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்தியாவின் நிதி தலைநகரம் என்று குறிப்பிடப்படும் மும்பையில் தற்போது ஏறக்குறைய நான்கு அங்குலத்துக்கும் (100 மில்லி மீட்டர்) அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

சில பகுதிகளில் 6.3 அங்குலம் அளவுக்கு மழை (161 மில்லி மீட்டர்) பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்