தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.9.12 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம், வைரம் பறிமுதல்

2 mins read
கேட்பாரற்றுத் தரையில் கிடந்த 2.4 கிலோ தங்கம்
9e01d143-47de-4dab-9040-c6b5e2cc9779
இடைவார், பயணப்பை, உள்ளாடை ஆகியவற்றில் தங்கமும் மடிக்கணினியில் வைரமும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைச் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: வெளிநாடுகளிருந்து வந்த பயணிகளிடமிருந்து ரூ.912 கோடி மதிப்புள்ள வைரத்தையும் தங்கத்தையும் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையச் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இம்மாதம் 11, 12ஆம் தேதிகளில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் கிட்டத்தட்ட ஆறு கிலோ தங்கத்தையும் 2,147 கேரட் வைரத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இடைவார், பயணப்பை, உள்ளாடை ஆகியவற்றில் தங்கமும் மடிக்கணினியில் வைரமும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

பேங்காக்கிலிருந்து மும்பை சென்று இறங்கிய பயணி ஒருவரின் கைப்பையிலிருந்த மடிக்கணினியில் சந்தேகப்படும்படியான பொருள் இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டனர். முழுமையாகச் சோதித்தபோது, ரூ.4.93 கோடி மதிப்புள்ள வைரம் அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பயணி கைதுசெய்யப்பட்டார்.

இரண்டாவது சம்பவத்தில், துபாயிலிருந்து மும்பை சென்ற மூன்று பயணிகளை அதிகாரிகள் இடைமறித்துச் சோதித்தனர். அவர்களின் இடைவாரிலும் பயணப்பையிலும் 775 கிராம் 24 காரட் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.61.45 லட்சம் எனக் கூறப்பட்டது.

தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, கென்யத் தலைநகர் நைரோபியிலிருந்து மும்பை வந்திறங்கிய 14 கென்ய நாட்டவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்கள் 22 காரட் தங்கத்தை உருக்கி, தங்கக் கட்டிகளாகவும் நகைகளாகவும் 2,741 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1.85 கோடி மதிப்புள்ள அவற்றை அவர்கள் தங்கள் உள்ளாடைகளிலும் ஆடைகளிலுள்ள பைகளிலும் ஒளித்து வைத்திருந்தனர்.

அத்துடன், அனைத்துலக வருகைக்கூடத்தில் ரூ.1.74 கோடி மதிப்புள்ள 2,406 கிராம் தங்கம் கேட்பாரற்றுத் தரையில் கிடந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்