புதுடெல்லி: கடந்த 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பையை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் தஹாவூர் ராணாவை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக ‘எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கனடிய-பாகிஸ்தானியக் குடிமகனான 63 வயது ராணாவை இந்தியாவிற்கு நாடுகடத்தத் தடையில்லை என்று கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய டேவிட் கோல்மன் ஹெட்லியின் குழந்தைப் பருவ நண்பர்தான் ராணா.
அமெரிக்கத் தந்தைக்கும் பாகிஸ்தானியத் தாய்க்கும் பிறந்தவரான ஹெட்லி ஓர் அமெரிக்கக் குடிமகன். மும்பைத் தாக்குதல் தொடர்பில் கடந்த 2009 நவம்பரில் அமெரிக்காவில் அவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பிறந்தவனான ராணா, மும்பைத் தாக்குதல் நிகழ்ந்த ஓராண்டிற்குள் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பால் (எஃப்பிஐ) சிகாகோவில் கைதுசெய்யப்பட்டார். மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாத அமைப்பிற்கு உதவிசெய்ததாகக் கூறி, அமெரிக்க நீதிமன்றத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்த ராணா, பின்னர் கனடா சென்று அந்நாட்டுக் குடிமகனானார். அங்கிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் சென்ற அவர், அங்கு பயண நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
ராணாவும் ஹெட்லியும் பாகிஸ்தானில் ஐந்தாண்டு காலம் ஒரே பள்ளியில் படித்ததாகச் சொல்லப்படுகிறது.
மும்பைத் தாக்குதல் தொடர்பில் மும்பைக் காவல்துறை 405 பக்கக் குற்றப்பத்திரிகையில் ராணாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவனுக்குப் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடனும், பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவுடனும் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2008 நவம்பர் 26ஆம் தேதி கடல் வழியாக மும்பை நகருக்குள் நுழைந்த பத்து லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 175 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.