தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

2 mins read
1d0e078a-9e69-4d4c-b5b6-b7fb4ed44d34
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பதிவாகும் அனைத்து குற்ற வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து வெளியிடுவதை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழக்கமாகக் கொண்டுள்ளது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

மும்பை: இந்தியாவில் பொருளியல் குற்றங்கள் அதிகம் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அண்மைய புள்ளி விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சார்பில், ஆண்டுதோறும் நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளி விவரங்களை வெளியிடுவது வழக்கம். இதன்படி, பொருளியல், சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளைச் சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது.

அதன்படி, அக்காப்பகம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் மூலம், கடந்த 2023ஆம் ஆண்டு மும்பை மாநகரில்தான் அதிக எண்ணிக்கையிலான பொருளியல் குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த 2023ஆம் ஆண்டு 19,803 நிதி மோசடி வழக்குகள் பதிவாகின என்றும் அவற்றுள் 6,476 வழக்குகளுடன் மும்பை முதல் இடத்தில் உள்ளது என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.

கடந்த 2023ல் இந்தியாவில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில், 27,675 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, தெலுங்கானா, 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முந்திய ஆண்டுகளை ஒப்பிடுகையில், பொருளியல் குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் 484 வழக்குகள் குறைவாகப் பதிவாகியுள்ளன. இதேபோல் தெலுங்கானாவின் ஹைதராபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகியவை பொருளியல் குற்றங்கள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதே வேளையில் இணையக் குற்றங்களின் எண்ணிக்கையும் நாடு முழுவதும் சீராக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு பெங்களூரில் 17,631 வழக்குகள் பதிவாகின.

4,855 வழக்குகளுடன் ஹைதராபாத் இரண்டாம் இடத்திலும் 4,131 வழக்குகளுடன் மும்பை மூன்றாம் இடத்திலும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்