டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இந்தியப் பெண்கள் அணி, தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வாகை சூடியது விளையாட்டுத் துறையைக் கடந்த மாபெரும் வெற்றி.
1983ல் இந்திய ஆண்கள் அணி அடைந்த வெற்றி, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வத்தைப் பெருகச் செய்ததுபோல, அந்நாட்டுப் பெண்கள் அணியின் அண்மை வெற்றி விளையாட்டுத் துறை மீதான ஒட்டுமொத்த ஈடுபாட்டை அதிகரிக்கக்கூடும்.
21ஆம் நூற்றாண்டில், பெண்களைக் கல்வி கற்க அனுப்பத் தயங்குவோர் இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், விளையாட்டுத் துறையில் பெண்கள் ஈடுபடுவதை விரும்பாத பெற்றோர்களும் ஆண்களும் இருக்கவே செய்கின்றனர்.
ஆயினும், நினைத்துப் பார்க்க மலைப்பாக இருந்தாலும் இந்திய மகளிரணி ஈட்டியதுபோன்ற வெற்றிகள், புரட்சிக்கான விதைகளே.
1973ல் பெண்கள் கிரிக்கெட் சங்கம் உருவாக்கப்பட்டதை அடுத்து 1976ல் முதல் டெஸ்ட் ஆட்டத்தை இந்திய மகளிரணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆடியது. ஈராண்டு கழித்து மகளிரணி முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைச் சுவைத்தது.
1984 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பி.டி உஷா, திடல்தடத்தில் 0.01 நொடியில் பதக்கத்தைத் தவறவிட்டாலும் அவரது பயணம் இந்தியப் பெண் விளையாட்டாளர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக அமைந்தது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, 2000ல் சிட்னி ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
நடமாடுவதற்கே பாதுகாப்பு குறைவாக இருக்கும் சூழலில் பெண்கள் விளையாட்டாளராக வெற்றி பெறுவது அருஞ்சாதனை.
தொடர்புடைய செய்திகள்
தேசிய அளவில் 2017ல் தொடங்கப்பட்ட ‘கேலோ இந்தியா’ திட்டத்தின்கீழ் பல்வேறு விளையாட்டுக்கான பெண்கள் லீக், அஸ்மிதா (ASMITA) தளம் எனத் தற்போது பெண்கள் விளையாட்டின் மீது கவனம் செலுத்தும் அமைப்புகள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.
பெண் விளையாட்டாளர்கள்மீது பாயும் கூடுதலான குறைகூறல்களும் அவர்கள்மீதான சுமையை அதிகரிக்கின்றன. விளையாட்டில் தோற்கும் அணியினர் வசைமொழிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. விளையாடுவதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்கும்படி சிலர் இணையத்தில் பதிவு செய்வதும் உண்டு.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் எதிர்கொண்ட வெறுப்பு, இதற்கான எடுத்துக்காட்டு. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஜெமிமா வெற்றி தேடித்தந்தபோதும் அவரது பெண்மையை அவமதிக்கும்படியான பதிவுகளும் சமூக ஊடகத் தளங்களில் வெளியாகின.
ஆண் விளையாட்டாளர்களின் திறனைப் பாராட்டும் ஆண் ரசிகர்கள், விளையாட்டு வீராங்கனைகளின் ஆற்றல்களை வெளிப்படையாகப் பாராட்ட முற்படவேண்டும்.
சராசரி ஆணின் உடலுரத்தையும் மனவுறுதியையும் பெண் விளையாட்டாளர் விஞ்சி, வெல்வதைக் காணும்போது ஆண்களில் சிலர் அஞ்சத்தான் செய்வர்.
ஆயினும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதும் இல்லை’ எனும் நாவுக்கரசரின் கூற்று, சாதிக்க நினைக்கும் உள்ளத்திற்குத் துணையாய் இருக்கட்டும்.

