பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னணி கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீப ஸ்ரீநிவாசுக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் ஆறு வார இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது.
முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்பதால் பிணையில் விடுவிக்கக் கோரி தர்ஷன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதே நேரத்தில், தர்ஷன் தம்முடைய கடப்பிதழை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் நீதிபதி எஸ் விஸ்வஜித் புதன்கிழமையன்று (அக்டோபர் 30) நிபந்தனை விதித்தார்.
அத்துடன், தாம் விருப்பப்பட்ட மருத்துவமனையை அவர் நாடலாம் என்றும் தமது உடல்நிலை சார்ந்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் அவர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மைசூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு, தர்ஷன் இடைக்காலப் பிணை கோரியிருந்தார்.
ரேணுகாசுவாமி என்ற தம்முடைய ரசிகரைக் கொலைசெய்த வழக்கில் தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இம்மாதம் 14ஆம் தேதி நடிகர் தர்ஷன், முதல் குற்றவாளியும் தர்ஷனின் காதலியுமான பவித்ரா கௌடா மற்றும் வழக்கில் தொடர்புடைய மேலும் சிலருக்குப் பிணை வழங்க விசாரணை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து, வழக்கமான பிணை கேட்டும் பின்னர் இடைக்காலப் பிணை கேட்டும் தர்ஷன் உயர் நீதிமன்றத்தை நாடினார்.