புதுடெல்லி: கர்நாடகாவின் கொப்பல் நகரில் வசித்துவரும் தோல்பாவைக் கூத்துக் கலைஞர் 96 வயது பீமவ்வா தொட்டபலப்பா ஷில்லேக்யதாராவுக்கு நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கலைப் பிரிவில் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.
காலில் சாதாரண செருப்புடன், அச்சமும் கூச்சமும் கலந்த உணர்வுடன் விருது வழங்கும் அவைக்கு அழைத்து வரப்பட்ட பீமவ்வா, மூப்பால் தள்ளாடியபடி நடந்துவந்தார்.
பிரதமர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தபின்பு, அதிபர் முர்மு நின்றிருந்த மேடை நோக்கி நடந்தார்.
ஆனால், அவர் நடக்க முடியாமல் தள்ளாடுவதைப் பார்த்த அதிபர், நெறிமுறைகளை எல்லாம் மீறி, பீமவ்வா நடந்து வருவதற்குள், அவர் இருக்கும் இடத்துக்கே ஓடோடி சென்றார்.
அதிபரின் அச்செயல் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பத்ம ஸ்ரீ விருதுக்கான சான்றிதழையும் விருதினையும் அந்தத் தோல்பாவைக் கலைஞருக்கு வழங்கினார் முர்மு.
கொப்பல் நகரின் மொரனலா கிராமத்தைச் சேர்ந்த அவர், கடந்த 70 ஆண்டுகளாகத் தோல்பாவைக் கூத்து மூலம் பல புராணக் கதைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி, மிகப் பழமையான கலைக்கு இன்னமும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறார்.