பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டறிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டறிக்கை

படம்: தி வயர்.இன்

29 Sep 2026 - 6:02 pm

2 mins read

நியூயார்க்: பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

அனைத்துலக அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மூன்று நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81வது கூட்டத்தொடரின் இடையே, ‘இபிஎஸ்ஏ’ (IBSA) அமைப்பின் 14வது வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சர் மாரோ வியேரா, தென்னாப்பிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், அல்-கய்டா, ஐஎஸ்ஐஎஸ், லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட ஐநாவால் தடைசெய்யப்பட்ட அமைப்புகள், அவற்றின் பின்னணியில் செயல்படும் நபர்களுக்கு எதிராக அனைத்துலகச் சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் எவ்வித இரட்டை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநா பொதுச்சபையில் ‘உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான விரிவான உடன்படிக்கை’யை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத நிதியுதவியைத் தடுப்பதுடன், இணையத்தளம், சமூக ஊடகங்கள் மூலம் இளையர்களைத் பயங்கரவாதப் பாதைக்கு ஈர்ப்பது, வெறுப்புப் பிரசாரங்களைப் பரப்புவது ஆகியவற்றைத் தடுக்க உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அவசியம் என மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் போர்ப்பதற்றம் உலகளாவிய தெற்கு நாடுகளின் எரிபொருள், உணவுப் பாதுகாப்பைப் பெருமளவில் பாதிப்பதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல்சார் வணிகப் பாதைகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எல்லாத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அமைச்சர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்
பயங்கரவாதம்தென்னாப்பிரிக்காபிரேசில்நியூயார்க்ஒருங்கிணைப்புநடவடிக்கைகடல்சார்பாதுகாப்பு