பாட்னா: திருமண விருந்தில் ஆட்டிறைச்சிக்குப் பதிலாக கோழிக்கறி பரிமாறப்பட்டதையடுத்து மணமக்களின் குடும்பத்தார் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் கடும் வாக்குவாதம் செய்ததுடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலத்தின் சஹர்சா மாவட்டத்திலுள்ள சிம்ரி நகரைச் சேர்ந்தவர் முகமது அன்வர். இவரது மகனுக்கும் முகமது ஜ்வேத் என்பவரின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமண விருந்தின்போது ஆட்டிறைச்சி பறிமாறப்படும் என மணமகள் வீட்டார் வாக்குறுதி அளித்ததாகவும் அதை நிறைவேற்றவில்லை என்றும் மணமகன் வீட்டார் கொந்தளித்தனர். ஆனால், இக்குற்றச்சாட்டை மணமகள் தரப்பு திட்டவட்டமாக மறுத்ததில் மோதல் வெடித்தது.
அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து காவல்துறையினர் விரைந்துசென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
முன்னதாக வெளியான காணொளியில் திருமணத்திற்கு வந்தவர்களைச் சிலர் வாள்கள் வீசியும் கம்புகளைக் கொண்டு தாக்குவதையும் காண முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பிலும் 12 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் சிம்னி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

