எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும், படப்பிடிப்புக்கு முன்பு தாம் எந்தவிதப் பயிற்சியும் மேற்கொள்வது இல்லை என்கிறார் நடிகை பிரியாமணி.
அண்மைக்காலமாக தனது நடிப்புப் பசிக்குத் தீனிபோடும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் அமைவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றவர் இவர்.
‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுடன் நடித்த பிறகு, இந்திய அளவில் பிரபலமானார்.
அண்மையில் வெளியான ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலும் நடித்த பிரியாமணி, ‘தி ஃபேமிலி மேன்’, ‘ஆர்டிகல் 370’ ஆகிய படைப்புகளில் நடித்த பிறகு, மீண்டும் தனது தாய்மொழியான மலையாளத்தில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
“என் அம்மா இந்திய அளவில் மிகச் சிறந்த ‘பேட்மின்டன்’ வீராங்கனை. நாட்டைப் பிரதிநிதித்து பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். என் அப்பாவும் நல்ல விளையாட்டு வீரர்தான். இப்போது தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
“சிறு வயது முதலே என்னையும் என் சகோதரரையும் பெற்றோர் அனைத்து வகையிலும் ஊக்கப்படுத்தி உள்ளனர். எங்களுடைய எந்த விருப்பத்துக்கும் அவர்கள் தடைபோட்டதில்லை. நான் கல்லூரியில் படித்தபோது மாடலிங் செய்ய விருப்பம் தெரிவித்தபோது, பெற்றோர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
“முதலில் நகை, ஜவுளிக்கடை விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த விளம்பரங்கள்தான் பின்னர் திரைத்துறையில் நுழைய நல்ல வாய்ப்பாக அமைந்தன,” என்று தாம் கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்துள்ளார் பிரியாமணி.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2002ஆம் ஆண்டு நடிகர் ஃபகத் ஃபாசில் ஜோடியாக ‘கையெத்தும் தூரத்து’ என்ற மலையாளப் படத்தில்தான் இவர் அறிமுகமாக இருந்தாராம். ஆனால், நாயகியாக தேர்வு பெற்ற பிறகும் கல்லூரித் தேர்வு காரணமாக, அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அதன் பிறகு, பாரதிராஜா கண்ணில் பட்டதும், அவரது படத்தில் நாயகியாக நடித்ததும் அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான்.
“எப்படி உணர்வுபூர்வமாக நடிக்கிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். எவ்வாறு பயிற்சி செய்கிறேன் என்றும் விசாரிப்பார்கள். உண்மையில், எனது நடிப்பு மிக இயல்பானது. எந்தவித முன்பயிற்சியும் இல்லாமல்தான் படப்பிடிப்புக்குச் செல்வேன்.
“அங்கு எனக்கான வசனங்களையும் காட்சிகளையும் தெரிந்துகொண்டு என் உள் உணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி நடிப்பேன்.
“நமது நடிப்பு படமாக்கப்படும்போது நம்மைச் சுற்றி உள்ளவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை வைத்து நாம் சரியாக நடித்துள்ளோமா என்பதைக் கணித்துவிடலாம்.
“நான் ‘பருத்தி வீரன்’ படத்துக்காகவும்கூட எந்தப் பயிற்சியும் பெறவில்லை. அதுதான் நான் முதன்முறையாக கிராமத்து இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்த படம்.
“இயக்குநர் அமீர் மிகவும் கூர்மையானவர். படப்பிடிப்பு எங்கு நடக்கிறதோ, அங்கு சென்றதும் முதல் வேலையாக அந்த இடத்தை முழுமையாக கண்களால் அலசுவார். அதன் பிறகு வசனங்களை விறுவிறு என எழுதுவார்.
“அப்படித்தான் அந்தப் படத்தில் நான் ஏற்று நடித்த ‘முத்தழகு’ கதாபாத்திரம் ஒவ்வொரு காட்சியிலும் மெருகேற்றப்பட்டது. இன்றும் நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்னை ‘முத்தழகு’ என்று கூப்பிடும்போது சிலிர்த்துப் போகிறேன். இதற்கான பெருமை அனைத்தும் இயக்குநர் அமீரையே சேரும்,” என்கிறார் பிரியாமணி.
தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள ‘ஆஃபீசர் ஆன் ட்யூட்டி’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், கண்டிப்பான கல்லூரிப் பேராசிரியையாக நடித்துள்ளாராம்.
“என் மனத்திற்கு எது சரியெனப்படுகிறதோ அதைச் செய்யக்கூடிய பெண்ணாக நடிப்பது உற்சாகம் அளிக்கிறது. இப்படத்தின் நாயகன் சாக்கோசன் எனக்குப் பிடித்தமான நடிகர்களில் ஒருவர். 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை ஒரு நடன நிகழ்ச்சியில் சந்தித்தேன். இப்போது அவருடன் இணைந்து நடிக்கிறேன். காலம் நமக்கு பல ஆச்சரியங்களை வைத்திருக்கும் என்பார்கள். அது உண்மை என்பதை இப்போது உணர்கிறேன்,” என்கிறார் பிரியாமணி.