தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,100 வழங்குவதே எனது திட்டம்: முதல்வர் பகவந்த் மான்

1 mins read
522068be-9d2a-4a70-924d-53c1dee9c621
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். - படம்: ஊடகம்

சண்டிகார்: நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சப்பேவால் சட்டசபைத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பிரசாரம் செய்தார்.

அப்போது, “இந்தப் பிரசாரக் கூட்டத்தில் ஆண்களைவிடவும் பெண்கள் அதிகமாக கலந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாக்கள், சகோதரிகளின் தேவைகள் அனைத்தையும் ஆம் ஆத்மி அரசு கவனித்துக் கொள்வதால்தான் பிரசாரப் பேரணிகளில் அவர்களில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூ.1,100 வழங்குவதே எனது அடுத்த திட்டம்,” எனக் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2022ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவோம்,” என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று, முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். ஆனால், இன்றுவரை பெண்களுக்கு அக்கட்சி தான் அளித்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த மே மாதம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பகவந்த் மான், தனது அரசாங்கம் பெண்களுக்கு ரூ.1,000க்குப் பதிலாக ரூ.1,100 வழங்கும் எனக் கூறியிருந்த நிலையில், இப்போதைய பிரசாரத்தில் மீண்டும் அதை உறுதிப்படுத்துவது போல் பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்