இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட அனுமதியோம்: மியன்மார்

இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட அனுமதியோம்: மியன்மார்

2 mins read
e78c93e8-f051-45c3-a161-3b0e2a410e69
புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார் மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லைங். - படம்: நியூஸ் ஆன் ஏர்

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்த மியன்மாரின் நிலப்பரப்பு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என அந்நாட்டு அதிபர் உறுதி அளித்திருப்பதாக இந்தியா தெரிவித்தது.

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியபோது, மியன்மார் அதிபர் மின் ஆங் ஹ்லைங் இந்த உறுதிமொழியை வலியுறுத்தியதாக, இந்திய வெளியறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டார்.

ஐந்து நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் மியன்மார் அதிபர். புதுடெல்லி வந்தடைந்த அவர், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தியத் தரப்புடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மியன்மாரின் இறையாண்மை, வட்டார ஒருமைப்பாட்டிற்கான இந்தியாவின் ஆதரவைப் பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக திரு மிஸ்ரி கூறினார்.

இரு தரப்பினரின் பாதுகாப்பு நலன்களை முன்வைத்து ‘தீய’ நடவடிக்கைகளுக்காக இருநாடுகளின் இறையாண்மைக்குட்பட்ட நிலப்பரப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியதாகவும் திரு மிஸ்ரி தெரிவித்தார்.

மியன்மார் தரப்பிலிருந்து வடகிழக்கில் செயல்படும் சில தீவிரவாதக் குழுக்கள் குறித்த பிரச்சினையை பிரதமர் மோடி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகம், பொருளியல் உறவுகள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், எல்லை மேலாண்மை, வளர்ச்சி உதவிகள், வட்டார நிலைமை ஆகியவை குறித்து, விரிவான வகையில் இருதரப்பும் கவனம் செலுத்தியதாக இந்திய வெளியுறவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியன்மார் இந்தியாவின் உத்திபூர்வ தொடர்புடைய அண்டை நாடுகளில் ஒன்றாகும். மேலும் நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட பல வடகிழக்கு மாநிலங்களுடன் 1,640 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மியன்மார் அதிபரை நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மியன்மார் அதிபரின் பயணம், இருநாடுகளின் நீண்டகால பங்காளித்துவத்தை வலுவாக்கவும் வட்டாரத்தில் இருதரப்பு, நன்மை, வளர்ச்சி, வளத்துக்காக இணைந்து பணியாற்றுவதற்குமான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது,” என்றார் திரு மிஸ்ரி.

குறிப்புச் சொற்கள்