தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜோரியில் 16 உயிர்களைக் காவு வாங்கிய மர்ம நோய்; விழிப்பு நிலையில் அதிகாரிகள்

2 mins read
9e0d8b26-970f-4962-a770-f71db627cccd
மர்ம நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், ஜிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். - படம்: ஏஎன்ஐ 

ரஜோரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இந்தப் பாதிப்பு அங்குள்ள பாதல் கிராம மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி விட்டுள்ளது.

இந்நோய் காரணமாக கடந்த டிசம்பர் (2024) மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்; 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். PGIMER சண்டிகர், தேசிய வைராலஜி நிறுவனம், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (NCDC) போன்ற அமைப்புகளும் மருத்துவ நிபுணர்களும் இந்நோய் குறித்து ஆலோசித்து வருகின்றனர். எனினும், இந்நோய் குறித்த காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

பாதல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் மர்ம நோயின் அறிகுறிகள் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரியில் (ஜிஎம்சி) சனிக்கிழமையன்று (ஜனவரி 18) அனுமதிக்கப்பட்டார்.

ரஜோரி மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இறப்புகள் குறித்து விசாரிக்கவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்றி வருகின்றனர். இந்த நோய் கிராமத்தில் உள்ள மூன்று குடும்பத்தினரை அதிகம் பாதித்துள்ளது.

நோய்க்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக உள்ளூர் அதிகாரிகள் தங்கள் விசாரணைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

அங்குள்ள மருத்துவக் குழுவினரும் மர்ம நோயின் பாதிப்புக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். 8 முதல் 10 நாள்களுக்குள் மர்ம நோயால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இறப்பு பற்றிய அறிக்கைகள் கிடைக்கும். நான்கு வார்டுகளில் மருத்துவ உதவி வழங்கப்படுகிறது.

“அத்துடன், வீடு வீடாகச் சென்று ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடர்கிறது. ஐசிஎம்ஆர் நோய் மாதிரிகளைச் சேகரித்து வருகிறது. நாங்கள் எல்லா நாள்களிலும் 24 மணி நேரமும் (24/7) மாதிரிகளை எடுத்து வருகிறோம். மேலும் கிராமப்புறக் கண்காணிப்பு டிசம்பர் 7ஆம் தேதியிலிருந்து தொடர்கிறது,” என்றார்.

நோய்த்தொற்றின் ஆரம்ப நிலையை அடையாளம் காணவும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் விழிப்புடன் இருந்து வருவதாக ஏஎன்ஐ ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்